வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் – கொழும்பில் புதிய ரயில் பாதைகள்

கொழும்பு மாநகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல்மிக்க பிரதேசங்களை உள்ளடக்கியவாறு மூன்று ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்படும்.

ராகமயில் இருந்து கொழும்பு கோட்டை ஊடாக கிருலப்பனை வரையிலும், மொரட்டுவை, பிலியந்தலை, நாராஹென்பிட்டி ஊடாக களனி வரையிலும், கொட்டாவ, பன்னிப்பிட்டி, தலவத்துகொட ஊடாக ஹணுப்பிட்டி வரையிலும் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

இதுபற்றி ஆராயும் கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.

திட்டத்தில் மஹரகம நகரையும் உள்ளடக்குவது பிரயோசனமாக இருக்குமென பிரதமர் சுட்டிக்காட்டினார். மக்கள் தேவைக்கு அமைய அபிவிருத்தி இடம்பெற வேண்டும். அவ்வாறில்லாத அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டிற்குத் தேவையில்லை.

இதற்கமைய, கொட்டாவை, ஹணுப்பிட்டி ரயில் பாதையில், மஹரகம நகரையும் உள்ளடக்க முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

வீதிப் போக்குவரத்து நெரிசலால் 2019ம் ஆண்டு விளைந்த நாளாந்த நஷ்டம் நூறு கோடி ரூபாவென பொருளாதார மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கான தீர்வுகளுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட ´சிற்றி பஸ் சேவை´ சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.

உத்தேச ரெயில் பாதைத் திட்டம் அரச – தனியார் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டமாக அமுலாக்கப்படும். இதற்கான நேரடி வெளிநாட்டு முதலீடு 500 கோடி அமெரிக்க டொலராகும். அரசாங்கம் 6 சதவீத பங்களிப்பை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.