பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள், உரிமை மீறல்களை கண்டறிய விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு!

இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை (Gender Equity and Equality) உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையிலான பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இந்த கோரிக்கையை மேற்கொண்டுள்ளது.
உத்தேச பாராளுமன்ற குழுவும் அதன் தவிசாளரும் சபாநாயகரால் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் அதன் அங்கத்தவர்கள் 25 உறுப்பினர்களை கொண்டமைதல் வேண்டும் என பிரேரிக்கப்பட்டுள்ளது.
குழு அதன் முதல் கூட்டத்திலிருந்து ஒரு வருட காலத்திற்குள் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன் அது சமர்ப்பிக்கப்பட்டு 08 வாரங்களில் குறித்த அறிக்கை தொடர்பாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் அவதானிப்புகளையும் அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
இந்த பிரேரணை பாராளுமன்றத்தின் 03 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.