பாரபட்சம் காட்டும் அக்கரைப்பற்று வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு குறைப்பிற்கு எதிராகவும் அதனை வழங்கக்கோரிய ஒரு மணிநேர கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நாளை (27) முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலையின் சுகாதார தொழில் வல்லுனர்கள் ஒன்றியத்தின் தலைவரும், தாதிய உத்தியோகத்தருமான ஏ.ஆர்.விஷாம் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து நாளை காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரை வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ ஆய்வுனர்கள், ஒளிப்பதிவு இயக்குனர்கள், மருத்துவ மாதுக்கள், E.C.G தொழில் நுட்பவியலாளர்கள், கண்பார்வை தொழில் நுட்பவியலாளர்கள் ஆகியோர் வைத்தியசாலைக்கு வருகைதந்து தங்களின் கடமைகளில் எவ்வித குறைகளுமின்றி பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்ற இந்நிலைமையில் அவர்களின் முழுமையான மேலதிக நேரக் கொடுப்பனவை வைத்தியசாலை நிருவாகம் வழங்க மறுத்துள்ளது.

கடந்த 2022.05.13 ஆம் திகதி அரசினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக, வைத்தியசாலையின் நிருவாகத்திடம் கலந்துரையாடியபோது, அவரவர்களின் அடிப்படைச் சம்பளத்திற்கேற்ப எல்லோருக்கும் சமமாக முழுமையான மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நிருவாகத்தினர் தெரிவித்திருந்தபோதும், கடந்த ஏப்ரல் மாதக் கொடுப்பனவை முழுமையாக வைத்தியர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு ஏனை சுகாதார ஊழியர்களுக்கு பூரணமாக வழங்க மறுத்துவிட்டனர்.

அரசினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முரனாகவும், வைத்தியர்களைத் தவிர ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டும் செயற்பாடுகளை வைத்தியசாலை நிருவாகத்தினர் முன்னெடுத்து வருகின்ற விடயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கான சரியான தீர்வினை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் வழங்கவேண்டும் இல்லை எனில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முன்வைக்கப்பட்டு அதற்கான போராட்டங்களை முன்னேடுக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.