பொதுமக்களின் சுகாதாரத்திற்கும், சுற்றாடலுக்கும் அச்சுறுத்தல் விடுப்போரை கண்காணித்து சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம் : பிரதம சுகாதார வைத்தியதிகாரி அர்சத் காரியப்பர்.

முறைகேடாக விலங்குகழிவுகளை அகற்றுவோரை கண்காணிக்கவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கல்முனை மாநகர சபை தயாராக இருக்கிறது. இவ்வாறான முறைகேடான கழிவகற்றல் நாசகார செயலை செய்யும் இறைச்சி கடைக்காரர்களின் சுற்றாடல் பாதுகாப்பு உத்தரவுப்பத்திரம், வர்த்தக அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை ரத்துசெய்யவும், அப்படிப்பட்டவர்களுக்கு இனிவரும் காலங்களில் அவர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்காமல் இருக்கவும் தீர்மானித்துள்ளோம் என கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துவரும் கல்முனை பிராந்திய சுகாதாரத்துறை சீர்கேடுகள் தொடர்பில் கல்முனை மாநகர சபை எடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர், கல்முனை மாநகரத்திலுள்ள நீரோடைகள், பொது இடங்கள், வயல்வெளிகள், வீதி ஓரங்களில் விலங்கு கழிவுகள், தின்மக்கழிவுகள் கொட்டப்பட்டு வருவதையும் அதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்றுவருவதையும் தொடர்ந்தும் அவதானித்து வருகிறோம். இது தொடர்பில் முக்கிய சிவில் அமைப்புக்கள் பலதும் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்களும் இதுதொடர்பில் பல்வேறு அறிவித்தல்களை விடுத்திருந்தார். அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாது பொதுமக்களின் சுகாதார மற்றும் சுற்றாடலுக்கு சவால் விடுக்கும் வேலைகளை சில நாசகாரர்கள் செய்துவருகிறார்கள். கல்முனை மாநகர சபையின் வளங்களை பயன்படுத்தி முடியுமானவரை திண்மக் கழிவகற்றலை செய்துவருகிறோம். அப்படியிருந்தும் மனிதாபிமானமில்லாது, இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற அச்ச உணர்வின்றி சிலர் செய்யும் செயலினால் ஏனைய நிறைய பொதுமக்கள் தர்மசங்கடமடைகிறார்கள்.

நீரோடைகள் கரைவாகு வயற்காணி, வளஞ்சா வட்டை வயற்காணி போன்றவற்றின் பிரதான வடிச்சல் நீரோடையாகவும் அதேபோன்று காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை  போன்ற பிரதேசங்களின் மழைநீர் வடிந்தோடும் வடிகாலாகவும் இருப்பதால் இந்த நீரோடையில் இயற்கைக்கு முறணாக கழிவுகளை வீசி அசுத்தப்படுத்த வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொள்வதுடன் அவ்வாறு கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்