உணவுப் பாதுகாப்பு ; இலங்கைக்கு ஜப்பான் அவசர உதவியாக 3.5 மில். டொலர்

இலங்கையில் நிலவும் சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலைக் கவனத்தில் கொண்டு, மனித நேய உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காக மேலதிகமாக 3.5மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவித் தொகையாக வழங்க ஜப்பான் அரசாங்கம் (16) தீர்மானித்திருந்தது.  02மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உணவுப் பொருட்களை உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் (WFP), உணவு, போஷாக்கு, சுகாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றுக்காக 01மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கத்தினூடாகவும், போஷாக்குக்காக 0.5மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஊடாகவும் இலங்கை மக்களுக்காக வழங்க முன்வந்துள்ளது.

கடந்த மே 20ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 03மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவி வழங்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பினூடாக, தற்போதைய சூழலில் ஜப்பான் வழங்கியுள்ள நிதி உதவியின் மொத்தப் பெறுமதி 6.5மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. நீண்ட காலமாக ஜப்பானிய மக்கள் நட்புறவைப் பேணி வரும், இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு, இந்த உதவி பங்களிப்பு வழங்குமென ஜப்பான் எதிர்பார்க்கின்றது.

1951ஆம் ஆண்டு செப்டெம்பர் 06ஆம் திகதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற சமாதான மாநாட்டின் போது மறைந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆற்றியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையிலிருந்து இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகியிருந்ததுடன், தற்போது 70வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. இக் காலப்பகுதியில் இலங்கையின் உற்ற நட்பு நாடாக, ஜப்பான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவளித்த வண்ணமுள்ளது. இந்த நட்புறவின் அடிப்படையில், இலங்கையில் மூன்று முன்னுரிமை பிரிவுகளின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்திக்கு ஜப்பான் ஆதரவளித்த வண்ணமுள்ளது. அவை, (01) தர வளர்ச்சியை ஊக்குவித்தல், (02) உள்ளடக்கமான வளர்ச்சிக்காக அபிவிருத்திக்கான ஒன்றிணைவு மற்றும் (03) பாதிப்புறும் தன்மையை குறைத்தல் போன்றன. இதற்காக 140பில்லியன் ஜப்பானிய யென்களுக்கு அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் மாத்திரம், இதுவரையில் 35.7மில்லியன் அமெரிக்க டொலர்களை (செப்டெம்பர் மாதம் வரையில்) மானிய உதவியாக வழங்கியுள்ளோம். குறிப்பாக (02) மற்றும் (03) முன்னுரிமைப் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆதரவுகளினூடாக, ஜப்பானினால் உடனடி மற்றும் நடுத்தர மற்றும் நீண்ட கால உதவிகள் வழங்கப்பட்டு, இலங்கை மக்களின் எதிர்கால வளர்ச்சிக்கான திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இலங்கையின் நிலைபேறான விருத்திக்காக ஆதரவளிப்பை நாம் தொடர்வதுடன், இந்த மாதத்தின் பிற்பகுதியில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தினூடாக பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம். இலங்கை மக்களுடன் எமது உறவை மேலும் வலிமைப்படுத்த ஜப்பானிய தூதரகம் எதிர்பார்க்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.