குருந்தூர்மலை பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் சீற்றம் – காவல்துறையினருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைத்துவரும் பௌத்த பிக்குவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிவரும் முல்லைத்தீவு காவல்துறையினர், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படும் தரப்பினரை முடக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனரென குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குருந்தூர்மலைப் பகுதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னிலைப்படுத்தி முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிவநேசன், ரவிகரன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முல்லைத்தீவு காவல்துறையினரால் மீண்டும் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் கந்தையா சிவநேசன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேரர்கள் முறைப்பாடு

 

குருந்தூர் மலையில், கடந்த ஜூன் 12 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் கந்தையா சிவநேசன், துரைராசா ரவிகரன், ஜூட் நிக்சன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இவர்கள் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்க முற்பட்டதாகத் தெரிவித்து, மணலாறு சப்புமல் தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்திரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்கள் முல்லைத்தீவு காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

பக்கச்சார்பான நடவடிக்கை

 

 

இதன்படி அவர்களிடம், முல்லைத்தீவு காவல்துறையினர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இது தொ்டர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தால் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொடந்தும் கட்டுமான பணிகளை முன்னெடுக்கும் தேரருக்கோ? ஏனையோருக்கோ? எதிராக நடவடிக்கை எடுக்காத முல்லைத்தீவு காவல்துறையினர், உரிமைக்காக ஜனநாயக ரீதியாக போராடும் மக்களை தொடர்ந்தும் அடக்க முயற்சிக்கும் பக்கச்சார்பான நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.