தாய்லாந்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட யானை துன்புறுத்தலுக்குப் பின்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றம்

தாய்லாந்து அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக கிடைக்க பெற்ற முத்துராஜா யானை யானை காப்பாளரின் முரட்டுத்தனமான நடத்தை காரணமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முத்துராஜா யானை தாய்லாந்தால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டதுடன், பின்னர் குறித்த யானை அளுத்கம கந்தே விகாரைக்கு வழங்கப்பட்டது.

ஆனால், யானைப் பாதுகாவலரின் முரட்டுத்தனமான நடத்தையால் யானை கடும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பின்னர் தெரிய வந்துள்ளது.

யானையின் தொல்லையை காரணம் காட்டி முத்துராஜா யானையை தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப தாய்லாந்து தூதுவர் இன்று தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அமைச்சின் செயலாளருடனான நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, யானையை இலங்கையில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டது.

பின்னர், தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் யானையை பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஊழியர்களின் கவனிப்புக்கு மத்தியில் தற்போது யானை பாதுகாப்பாக இருப்பதாக அமரவீர தெரிவித்தார்.

யானையை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வைக்க தேசிய விலங்கியல் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் தாய்லாந்து தூதுவருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மிருகக்காட்சிசாலையில் தற்போது யானை மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும், யானையை பார்வையிட்ட தாய்லாந்து தூதுவர், யானையை பராமரிக்கும் நடவடிக்கைகள் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் மிருகக்காட்சிசாலை திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.