யுவதி படுகொலை – பல்கலைக்கழக மாணவன் கைது!

கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவன் நேற்று (17) மாலை வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலையின் பின்னர் சந்தேகிக்கப்படும் மாணவனும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கருவாத்தோட்டம் பொலிஸாரிடம் அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொழும்பு குதிரை பந்தய திடலில் படுகொலை செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த யுவதி பல்கலைக்கழக மாணவி என பின்னர் தெரியவந்துள்ளது.

24 வயதுடைய பல்கலைக்கழக மாணவியான இவர், விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்று வருகிறார்.

“குறிப்பாக இக்கொலை தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, சந்தேக நபரை விரைவாகக் கைது செய்ய கொழும்பு பிரதேசத்தில் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதன் விளைவாக இன்று மாலைக்குள் சந்தேகநபரை கைது செய்ய முடிந்தது.

“சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டவுடன், அவர் சுற்றித் திரிவதாக சந்தேகிக்கப்படும் பல பகுதிகளுக்கு பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் இந்த சந்தேக நபர் வெல்லம்பிட்டியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.”

“அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்ய முடிந்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் இரத்தக்கறை படிந்த பை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”

“இந்தச் சந்தேக நபர் கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வு நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவராவார். அவருக்கு சுமார் 24 வயது இருக்கும்.”

“சந்தேக நபரும் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயின்று வருகிறார். கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்த கொலையின் பின்னர் சந்தேக நபரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதை உறுதியாக கூற முடியாது”

“எனவே, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.