எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய ‘சர்வஜன வாக்குரிமை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாத திகதி அறிவிப்பு!

பாராளுமன்றத்தை மார்ச் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (01) பிற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் 07ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 4.00 மணி வரை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2287/28, 2301/17 மற்றும் 2306/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அன்றையதினம் பி.ப 4.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் நடைபெறும்.
மார்ச் 08ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் மு.ப10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் பிரசுரிக்கப்பட்ட 2321/07 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழான ஒழுங்குவிதி விவாதம் இன்றி நிறைவேற்றப்படும்.
இதனைத் தொடர்ந்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2290/24 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2315/46, 2309/40, 2311/08, 2311/18, 2312/77 மற்றும் 2312/78 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2306/54 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், அரசின் பல்வேறு சட்ட நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் தொடர்பான 24 பிரேணைகளை முன்வைப்பதற்கும், தனிநபர் சட்டமூலமாக இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தை இரண்டாவது வாசிப்புக்கு முன்வைக்கவும் இங்கு இணங்கப்பட்டது.
இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மார்ச் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் “சர்வஜன வாக்குரிமை” தொடர்பாக எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப 5.30 மணிவரை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார். இந்த இரண்டு தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் 10.30 மணிவரையான காலப் பகுதி வாய்மூல விடைகளுக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.