6 இலட்சம் பயனாளர்களுக்கு வெள்ளி முதல் நலன்புரி கொடுப்பனவு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

ஆறு இலட்சத்து 44 ஆயிரத்து 783 பயனாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (25) முதல் கடந்த ஜூலை மாதத்துக்கான நலன்புரி கொடுப்பனவு பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக வழங்கப்படும்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு இம்மாதத்துக்குள் கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீரிழிவு நோயாளர்கள், விசேட தேவையுடையவர்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர்களுக்கு ஜூலை மாதத்துக்கான நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க 2664 மில்லியன் ரூபாவை திறைசேரி சகல பிரதேச செயலகங்களுக்கும் வழங்கியுள்ளது.

644783 பயனாளர்களுக்கான ஜூலை மாத கொடுப்பனவு நாளை முதல் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும். ஆகவே பயனாளர்கள் எவ்வித கலக்கமும் இல்லாமல் பிரதேச செயலகங்கள் ஊடாக வழமை போல் தமக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை இதுவரை காலமும் வழங்கப்பட்ட நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கினார். இதற்கமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனார்களில் பெரும்பாலானோர் அனுப்பி வைத்துள்ள வங்கி வைப்புக்களின் தகவல்கள் பிழையானவை. ஆகவே தவறுகளை திருத்திக் கொள்ள நலன்புரி சபை உரிய நடவடிக்கைகளை தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுத்துள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதல் கட்ட பெயர் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் இதுவரை பிரத்தியேக வங்கி கணக்கை ஆரம்பிக்காமல் இருந்தால் வெகுவிரைவில் புதிய கணக்கை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.