அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் நேரடி விஜயம்!
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று விஜயம் செய்துள்ளார்.
நேற்று அநுராதபுரம் சிறைச்சாலையில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக சிறைச்சாலையில் இருக்கும் 11 அரசியல் கைதிகளின் பெற்றோர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் அங்கு விஜயம் செய்துள்ளார்.
அங்க சென்ற அவர், தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகருடன் கலந்துரையாடிய போது, அவர் 11 அரசியல் கைதிகளும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இச்சிறைச்சாலையில் பாதுகாப்பு இல்லையெனின் உடனடியாக மகசின் சிறைச்சாலைக்கோ அல்லது யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கோ மாற்றும்படி சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.
எனினும், இங்கு அவர்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாகவும் பாரதூரமான நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என சிறைச்சாலை அத்தியட்சகர் குறிப்பிட்டதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இதேவேளை, “உலகம் பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றின் காராணமாக சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் அச்சமடைந்துள்ளனர். அரசாங்கம் சிறைக் கைதிகள் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும். கைதிகள் எவருக்கேனும் கொரோனா தொற்று ஏற்படும் என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்கவேண்டும்” என எம்.பி. தெரிவித்தார்.
அத்துடன், உடனடியாக சிறைச்சாலை ஆணையாளருடன் தொலைபேசியில் உரையாடி, 11 அரசியல் கைதிகளின் பாதுகாப்பின்மை தொடர்பாக விளங்கப்படுத்தி அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் உடனடியாக 11 தமிழ் அரசியல் கைதிகளையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை