நாடாளுமன்றத்தை தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்துமாறு ஆலோசனை!

நாடாளுமன்றத்தை தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையமாகப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். ஏன் இவ்வாறு கோருகின்றனர்? இவ்வாறானவர்கள் இல்லாமல் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்று எண்ணுகின்றனர்.

எவ்வித பயனும் இன்றி நாடாளுமன்றத்தைக் கூட்டி 92 இலட்சம் வீண் செலவு செய்ய எதிர்பார்ப்பது எதற்காக?

நாடாளுமன்றம் கூட்டப்படாத சந்தர்ப்பத்திலும் 87 இலட்சம் செலவாகின்றது. நாடாளுமன்றத்தை தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையமாகப் பயன்படுத்தினால் இந்த செலவு மீதப்படும் என்பது எனது நிலைப்பாடாகும்.

முன்னர் விவசாய அமைச்சிற்காக பயன்படுத்தப்பட்ட சுமார் 240 இலட்சம் ரூபாய் வாடகை செலுத்தப்பட்ட கட்டடத்தையும் மருத்துவ கண்காணிப்பு நிலையமாகப் பயன்படுத்த முடியும்.

அந்த கட்டடம் தொடர்பாக அரசாங்கத்துடன் இன்னும் ஒப்பந்தம் நடைமுறையிலிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அது மாத்திரமின்றி அமைச்சர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் காணப்படுகின்றன.

அவற்றை மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆயத்தங்களைச் செய்யும் அலுவலகங்களாக பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.