ஊரடங்கு உத்தரவால் அவதிப்படும் 64 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம்- அங்கஜன்

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் அவதிப்படும் சுமார் 64 ஆயிரத்து 278 வறிய குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

இது தொடர்பாக அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில், “யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக காங்கேசன்துறை இராணுவ முகாமுக்கு அண்மையில் தனிமைப்படுத்தும் முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, ஊடரங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் வறுமைக்கோட்டுக்குக் கீழ்ழுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், சிறப்புத் தேவையுடையோரை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள், நாளாந்த கூலி பெறும் குடும்பங்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் என பல்லாயிரக்கணக்கொனோர் பாதிக்கப்பட்டுள்னர்.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் மூன்று அல்லது நான்கு மாத காலத்திற்காவது வாராந்தம் உணவுப் பொதிக்கான முத்திரை வழங்கப்பட வேண்டும் என அங்கஜன் இராமநாதனால் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 64 ஆயிரத்து 278 குடும்பங்களுக்கு உலர் உணவு தேவையை நிறைவு செய்யப்பட வேண்டும் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் 900 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 3 ஆயிரத்து 600 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

இரண்டு அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 4 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

மூன்று அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 400 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 4 ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

நான்கு அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 400 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 5 ஆயிரத்து 600 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

ஐந்து அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 7 ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 407.356 மில்லியன் ரூபாய் நிதி முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யுமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் ஊடாக வறுமை ஒழிப்புச் செயலணியிடம் கேட்டுள்ளதாக அங்கஜன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அத்தியவசியப் பொருட்களுக்கான பொதியில் அரிசி, மா, சீனி, ரின்மீன், பருப்பு, சவர்க்காரம் உட்பட 14 அத்தியாவசியப் பொருட்கள் காணப்படும்.

இது சம்பந்தமான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தயார் செய்யப்பட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இதற்கான திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ள அவர், கிட்டத்தட்ட 64 ஆயிரம் குடும்பங்கள் அரசாங்க அதிபர் ஊடாக இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.