சுவிஸ் போதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் காப்பாற்றியது யார்?- ஆளுநர் தகவல்

சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினார்கள் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியுள்ளார்.

யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் கூறுகையில், “சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பாதுகாத்தது பொலிஸாரே.

மேலும் பொலிஸார் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அச்சுறுத்தியமை தொடர்பாகவும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம். இதனடிப்படையில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் இருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சுவிஸில் சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, குறித்த ஆராதனையில் கலந்துகொண்ட இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது. கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த ஆராதனையில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் எங்கும் செல்லமுடியாதவாறு வடக்கு மாகாணமே முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுவிஸ் போதகர் இலங்கை வரும்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாதமை குறித்து கேள்வி எடுந்துள்ள நிலையில் ஆளுநர் மேற்படி விடயத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.