ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளபோது மக்களுக்கு ஒருதடவை அனுமதி வழங்க வேண்டும் – ஜே.வி.பி. ஆலோசனை

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளபோதே நாள் ஒன்றுக்கு ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்த மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய அனுமதிப்பத்திரம் ஒன்றை மக்களுக்கு வழங்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி ஆலோசனை வழங்கியுள்ளது.

அவ்வாறு செயற்படுவதன் மூலம் ஊரடங்கைத் தளர்த்தியதும் மக்கள் மத்தியில் ஏற்படும் அவதியைத் தவிர்க்க முடிவதுடன் கொரோனா வைரஸ் பரவுவதையும் கட்டுப்படுத்த முடியும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்தநாயக்க தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து அவர் மீறலும் தெரிவிக்கையில், “ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும்கூட, ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தும் அந்த சில மணிநேரங்களில் ஏற்படும் அவதி மற்றும் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவது இலகுவான விடயமல்ல.

அது ஒழுக்கம் தொடர்பான பிரச்சினை அல்ல. மாறாக பெருமளவான மக்கள் குறுகிய நேரத்திற்குள் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் காணப்படும்.

அதேவேளை, அதற்கேற்றவாறு விற்பனை நிலையங்கள் வடிவமைக்கப்படவில்லை என்பதால் இத்தகைய நெருக்கடி நிலையொன்று ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததாகும். அதன் காரணமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கான நோக்கத்தை முழுமையாக அடைந்துகொள்ள முடியாத நிலையொன்று ஏற்படும்.

எனவேஇ ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் அதேவேளை மருந்தகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்.

அதேபோன்று கிராமசேவை அலுவலர்களின் ஊடாக நாளொன்றுக்கு ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தி மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதன்மூலம் மக்கள் மத்தியில் ஏற்படும் அவதியைத் தவிர்க்க முடிவதுடன், கொரோனா வைரஸ் பரவுவதையும் கட்டுப்படுத்த முடியும். உலகின் பல நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

மேலும் வீடுகளுக்குச் சென்று உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் நடைமுறை இலங்கையில் காணப்படுவதால், அவ்வாகன உரிமையாளர்களை சதொச போன்ற விற்பனை நிலையங்களுடன் தொடர்புபடுத்தி, வீடுகளுக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை அமுல்படுத்த முடியும். இம்முறை சீனாவில் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.