நாடாளுமன்றத்தினை கூட்டும் தீர்மானத்திற்கு ஆதரவில்லை – சுமந்திரன்!
நாடாளுமன்றத்தினைக் கூட்டும் தீர்மானத்திற்கு கட்சி தலைவர்கள் ஆதரவளிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நானும் ரவூப் ஹக்கீமும் விரைவாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம்.
தற்போதைய சூழ்நிலையில் பெருமளவானோர் ஒரே இடத்தில் சந்திப்பது உகந்ததல்ல என்ற போதிலும், மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கும் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதற்கும் நாடாளுமன்றம் இயங்குவது அவசியமாகும்.
எனினும் இந்த முன்மொழிவிற்கு விரும்பத்தக்க வகையிலான பிரதிபலிப்பு கிடைக்கப்பெறவில்லை.
மாறாக கட்சித்தலைவர்கள் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு, நிலவரம் குறித்து ஆராயவேண்டும் என்ற எனது யோசனைக்கு கூட்டத்தில் ஆதரவான பிரதிபலிப்பு வெளிப்படுத்தப்பட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை