தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்: அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி- ஜீவன்

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் மலையகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத்தில் வாழும் அனைவருக்கும் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “சீனாவில் கோரத் தாண்டவத்தை ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று முழு உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. இதனை எப்படிக் கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் பலம்பொருந்திய நாடுகள் கூட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஜனாதிபதியால் 16 அம்ச நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நலன்கருதி எதிர்காலத்தில் மேலும் சில முடிவுகளை அவர் எடுப்பார் என நம்புகின்றோம்.

எனவே, கொரானா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு மலையகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அத்துடன், மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் காத்திரமான நடவடிக்கைகளை தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனையின் பேரில் முன்னெடுத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.