வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக விசேட திட்டம் வேண்டும் – சஜித்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெளிவிவகர அமைச்சு விசேட செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து இன்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் குடும்பங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக உலகநாடுகள் பலவும் பெரும் நெருக்கடிக்கும், அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கட்டிருக்கின்றன என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் எமது நாடும் இதிலிருந்து மீள்வதற்கு பெரும் போராட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றும் இந்நிலையில் இலங்கையர் என்ற வகையில் இத்தாலி, தென்கொரியா, ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய உலகநாடுகளில் வாழும் தொழில்புரியும் இலங்கைப் பிரஜைகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துபவர்கள் அவர்களே என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், தைரியம், தன்னம்பிக்கை என்பவற்றை மேலும் வலுப்படுத்துவதும், அவர்களது சுகாதார நலன் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகள் குறித்து அவதானம் செலுத்துவதும் முக்கியமானதாகும் என்றும் அதனை முன்நிறுத்தி இராஜதந்திரத் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆகவே அவர்கள் தொடர்பில் வெளிவிவகர அமைச்சு விசேட செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதுடன் அவர்களின் குடும்பங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும். குறித்த நாடுகளுடன் நெருங்கிய இராஜதந்திர உடன்பாடுகள் மூலம் அவர்களைப் பாதுகாப்பது இன்றியமையாததாகும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்