நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

குறித்த ஆறு மாவட்டங்களிலும் அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் எவ்வித தடையும் இன்றி, தமது பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள், மரக்கறி, மீன், இறைச்சி மற்றும் மருந்து வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் இந்த விடயத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.