அர்த்தமற்றதாகும் ஊரடங்கு – முதல்வர் ஆனோல்ட்
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கானது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தமற்றதாகிவிடுகின்றது என யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
இன்று (25) நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டிருந்ததாவது.
ஊரடங்கு சட்டம் (24) குறிப்பிட்ட நேரம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கில் பொது மக்கள் யாழ் மத்தியில் ஒன்று கூடியிருந்தமையினை அவதானிக்க முடிந்ததது. இவ் வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தின் முக்கிய நோக்கமான மக்கள் கூட்டாக ஒன்று கூடுவதை தடுக்கும் செயன்முறை ஊரடங்கு தளர்த்தப்பட்ட சந்தர்ப்பங்களில் வலுவற்றதாகிவிடுவதனை அவதானிக்க முடிந்தது.
அதாவது வைத்தியர்களால் இத்தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக முன்வைக்கப்படும் ஆலோசனைகளான தனிமைப்படுத்தல், கைகளை கழுவுதல், சுத்தமாக இருத்தல், இரு நபர்களுக்கிடையில் குறிப்பிட்ட இடைவெளியை பேணுதல் என்பன ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் மீறப்படுகின்றன.
ஒன்று கூடும் மக்கள் வைத்திய ஆலோசனைகளைப் பொருட்படுத்தாது பொருட்களை கொள்வனவு செய்வதில் மாத்திரமே அவதானம் செலுத்துகின்றனர். இது ஊரடங்கின் நோக்கத்தை சீர்குலைத்து விடுகின்றது.
எனவே ஊரடங்கு தளர்த்தல் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளதுடன், மக்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பது தொடர்பில் புதிய முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினதும் எல்லைப் பரப்பினுள் இலகுவாக மக்கள் தமக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான முறைமைகளை ஏற்படுத்தி, நகர் பகுதியில் பலர் ஒன்று கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
இதை கணக்கிலெடுக்காது விடுவோமாக இருந்தால் மக்கள் ஒன்று கூடுவதன் மூலம் ஏற்படும் பாரிய சிக்கல் நிலைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போய் விடும்.
எனவே இது தொடர்பில் மக்கள் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு துறையிலும் உள்ள வைத்தியர்களுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன். மக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்களை குறைப்பதற்காக துறை சார்ந்தவர்களையும், வைத்தியர்களையும் உள்ளடக்கியதாக ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றை விரைவாக நடாத்துவது தொடர்பில் முயற்சித்து வருவதுடன் அதில் கலந்துரையாடி கூட்டு அறிக்கை ஒன்றின் மூலம் பொது மக்களுக்கான சேவைகளை அவர்களின் உள்ளூராட்சி மன்ற எல்லைகளுக்குள் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு இலகுவான வழிமுறை ஒன்றின் மூலம் மேற்கொள்வது என்பது தொடர்பாகவும்,
மேலும் வடக்கின் எல்லைகள் மூடப்பட்டு எவ்வாறு பொது மக்கள் ஒன்று கூடும் வாய்ப்புக்கள் குறைக்கப்பட்டுள்ளதோ அது போன்று ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற போது யாழ் மாநகர நகர்ப்பகுதியில் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் மாநகர எல்லைகளை மூடி அத்தியவசிய வைத்தியசாலை தேவைகள், மருத்துவ வசதிகளுக்கான அனுமதிகளை மாத்திரம் வழங்குவது தொடர்பாகவும் ஆளுநர் ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும் என்றும் இதற்கு சகல உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், அதன் நிர்வாகமும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் கருத்து வெளியிட்டார்.
அத்துடன் ஊரடங்கு நிலமையின் போது கடற்றொழிலுக்காக வழங்கப்பட்டிருக்கின்ற அனுமதிகளும் ஊரடங்கின் நோக்கத்தினை முழுமை செய்வதிலிருந்து விலகிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது என்றும் இவ் வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்டிருக்கும் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாது, பாதுகாப்பு பிரிவின் மேற்பார்வை இன்றி மக்கள் ஒன்று கூடுவதற்கு வழிவகுப்பதாகவும், இது பின்னர் பாரிய சவாலாக அமையக் கூடும் எனவும் இது ஒரு பொருத்தமற்ற செயற்பாடு என்றும், இவ்வாறான செயற்பாடுகள் எமது வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் துறை சார்ந்தோர்களி தனிமைப்படுத்தல் மற்றும் இந் நோய்த்தாக்கம் குறித்து ஆற்றுகின்ற சேவைக்கும், தியாகத்திற்கும் முற்றிலும் எதிரானதாக மாறிவிடுகின்றது.
அவர்களின் தியாகங்களை அர்தமற்றதாக்கிவிடுகின்றது. எனவே இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கருத்துக்களேதுமில்லை