வடக்கு மாகாணத்தில் நாளை 8 மணிநேரம் ஊரடங்கு தளர்வு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (27) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில்கொண்டு அதி அபாய வலயங்களாக அரசால் பிரகடனப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இன்று (26) வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்கலை மேற்கொள்ள அரசு சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் பற்றிய இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் மீண்டும் அறிவிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்துக்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும், சிறு தேயிலை தோட்ட, ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஊடக சேவைக்காகவும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.