கொரோனாவை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம் வெளியீடு

“சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைக்க பொலிஸாருக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதனை விட அவர்கள் அதனைப் போலி மருத்துவச் சான்றிதழுடன் நிரூபிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டனர்.”

– இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரனை, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி மிரட்டிய சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண மருத்துவ அதிகாரிகள் சங்கம் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு அமைவாக, இது தொடர்பான விசாரணைகள் பதில் பொலிஸ்மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறனதொரு நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அழைத்து மன்னிப்புக் கோரினார்.

சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இல்லை என்று இரண்டு தடவைகள் ஊடக அறிக்கை வழங்கியதும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிதான். பிலதெனியா தேவாலயத்தால், மதபோதகருக்கு கொரோனா தொற்று உள்ளதை மறைக்க அவர்களுக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும் அவர்கள் அதைப் போலி மருத்துவ சான்றிதழுடன் நிரூபிக்க முயற்சித்தார்கள்.

மதபோதகருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதை, சுவிஸில் உள்ள இலங்கைக்கான தூதரகம் மூலம் வடக்கு மாகாண ஆளுநர் நிரூபித்தார்.

எனவே தேவாலய நிர்வாகத்தினர், ஆராதனையை ஒழுங்குபடுத்திய மதபோதகர் ஆகியோருடன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியும் தண்டிக்கப்பட வேண்டும்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.