மலையகத்தில் மக்கள் வெள்ளம்: சுகாதார அறிவிப்புக்கள் பல இடங்களில் உதாசீனம்!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து மலையகத்தில் பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் படையெடுத்து வந்து, அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

சதொச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் பொருட்களை வாங்குவதைக் காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில், அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பொலிஸ் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளையில் நகரங்களுக்கு வருபவர்கள் தற்பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வரிசைகளில் நிற்கும் போது குறைந்தபட்சம் ஒரு அடி இடைவெளியையாவது பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஹற்றன், தலவாக்கலை ஆகிய நகரங்களுக்கு இன்று வருகை தந்து, பொருட் கொள்வனவுக்காக வரிசையில் காத்திருந்தவர்களில் பலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத நிலை காணப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றாததோடு, சன நெருக்கடியால் மேலும் சிலர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டதையும் குறித்த நகரங்களில் காணமுடிந்தது.

எனினும், பொலிஸார் தலையிட்டு குழப்பங்களைம் தடுத்ததுடன் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கினர்.

ஹற்றன், தலவாக்கலை ஆகிய நகரங்களில் வங்கிகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. எரிபொருள் நிலையங்களிலும் வாகனங்கள் நீண்டவரிசையில் நின்ற நிலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.