அரச நிவாரணங்கள் தொடர்பில் போலியான பிரச்சாரங்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை

அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ  சமூக ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கொவிட் 19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், மக்களுக்கு அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் தொடர்பாக போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் தொடர்பாக போலியான தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுவதன் காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவது உட்பட பிரதமர் மேற்கொண்டுள்ள தீர்மானங்களை வேண்டுமென்றே போலியான முறையில் சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.

நிதியாற்றல் உள்ள, இல்லாத அனைவரும் கொரோனா அனர்த்தம் காரணமாக உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் தேவைகளுக்காக கீழ்த்தரமான முறையில் இவ்வாறான போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவதனைக் கண்டிப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவது தொடர்பாக பிரதமரின் சட்டத்தரணிகள் கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு இன்று முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்தனர்.

கட்சி, நிற பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் போலியான தகவல்களை சமூகமயப்படுத்தி அரசாங்கத்தின் முயற்சியை குறை கூறுவதற்குப் பதிலாக அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க உதவி வழங்குமாறு அரசாங்கம் அனைத்து சமூக ஊடகங்களிடமும் வேண்டிக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.