‘அமெரிக்கன் வொய்ஸ்’ ஒலிபரப்பு நிலையம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாறுகிறது

சிலாபம், இரணவில் பகுதியில் அமைக்கப்பட்ட அமெரிக்கன் வொய்ஸ் ஒலிபரப்பு நிலையத்தை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலையாக மிகத் துரிதமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அரசாங்கம் எடுத்துள்ள குறித்த தீர்மானித்ததையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) மாலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அங்கு விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

சுமார் 50 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளைக் கொண்ட இந்த நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின்போது இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர், “இந்த நிலையத்தை தற்காலிக கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, இராணுவத் தளபதிக்கு அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இராணுவத் தளபதி மற்றும் இராணுவத்தினரின் முழுமையான பங்களிப்பின் கீழ் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்பில் இந்த நிலையம் மிகத் துரிதமாக கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இங்கு சுமார் 50 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியும்” என்றார்.

இலங்கை அரசாங்கத்தின் வரி செலுத்தல் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட 400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அமெரிக்கன் வொய்ஸ் நிலையம், 2017ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் வாழும் 236.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 47 மொழிகளில் அமெரிக்கன் வொய்ஸ் வானொலி, செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கி வருகின்றது. இங்கு பாரிய 4 கட்டடங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.