படுகொலையாளிகளுக்கு பொதுமன்னிப்பு நாட்டுக்கு விடுக்கப்பட்ட சவால்! – ஸ்ரீநேசள்

நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகள் விடுவிக்கப்படாமல், அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இவ்வாறான படுகொலையாளி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருப்பதென்பது ஜனநாயகத்திற்கும், மனித உரிமைக்கும், சட்டவாட்சிக்கும், நீதிக்கும் விடப்பட்ட சவாலாகவே இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்டவரென நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கா அவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார் என்ற செய்தி தமிழ் மக்களின் காதுகளில் சூடாகப் பதியப்பட்ட செய்தியாக இருக்கின்றது.

மிருசுவில் பகுதியில் எட்டு அப்பாவித் தமிழர்கள் அதில் பதினொன்று பன்னிரண்டு மற்றும் ஐந்து வயதுக் குழங்தைகளும் உள்ளடங்குகின்றனர். இவர்களைக் கைது செய்து அவர்களை கழுத்தறுத்து மிகக் குரூரமாகக் கொலை செய்திருந்தார்கள். இது தொடர்பில் 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விசாரணை நடாத்தபட்டு நீதிமன்றத்தினால் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரையே தற்போது ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்.

தற்போது நாட்டில் கொரோணா தொடர்பில் மக்களின் பார்வை ஒரு பக்கம் இருக்கின் நிலையில் ஜனாதிபதி அவர்களால் ஒரு படுகொலைக் குற்றவாளி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருக்கின்றார் என்பது இந்த நாட்டில் ஜனநாயகம், நீதி என்பன இருக்கின்றதா? என்கின்ற நிலையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. ஐநா மனித உரிமைப் பேரவையின் 30ஃ1 தீர்மானம் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், மனித உரிமைமையப் பேணுதல் என்பன அதில் பிரதான விடயங்களாக உள்ளடக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த அரசாங்கம் வந்தவுடனேயே அந்தப் பிரேரணையில் இருந்து பின்வாங்கியதோடு, இன்று படுமோசமான குற்றவாளி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையும் செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த அரசாங்கம் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் நீதி வழங்குமா? பொறுப்புக் கூறுமா? மனித உரிமைகளைப் பேணுமா? என்கின்ற கேள்விகளும் மக்கள் மத்தயில் எழுகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்றோம், அரசியற் கைதிகளை விடுதலை செய்யப் போகின்றோம் என்றெல்லாம் சொல்லி தற்போதைய அரசாங்கம் சார்ந்து, ஜனாதிபதி சார்ந்து செயற்படுகின்றவர்கள் தற்போது ஒரு படுகொலையாளி ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக வாய்திறக்க முடியாத மௌனிகளாக இருக்கின்றார்கள. கடந்த காலங்களில் குருவி பறந்தாலும் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடியவர்கள் இன்று இவ்வாறானதொரு நீதி மீறப்பட்ட விடயம் இடம்பெற்றுள்ள போது எவ்வித பேச்சும் இல்லாமல் பெட்டிப் பாம்புகளாக இருக்கின்றார்கள்.

நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியற் கதிகள் விடுவிக்கப்படாமல், அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இவ்வாறான படுகொலையாளி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டிருப்பதென்பது ஜனநாகத்திற்கும், மனித உரிமைக்கும், சட்டவாட்சிக்கும் நீதிக்கும் விடப்பட்ட சவாலாகவே இருக்கின்றது என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.