மேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

இலங்கையில் இதுவரை 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்களாக 106 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 50 பேர் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.,

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய கொழும்பில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்களும் களுத்துறையில் 15 தொற்றாளர்களும் கம்பஹாவில் 10 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்த நிலைமையானது கொரோனா பரவலுக்கான சூழலை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மக்களை முழுமையாக வீடுகளுக்குள் இருந்து வைரஸ் பரவலை தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்.

இதனிடையே  ஒன்று கூடல்கள் தடுக்கப்பட முன்னரேயே, கடந்த 13 ஆம் திகதி புறக்கோட்டையில் சிவப்பு பள்ளிவாசல் என அரியப்படும் பள்ளிவாசலில் ஜும் ஆ தொழுகைக்கு சென்ற தந்தை, மகனுக்கு கொரோனா தொற்றிருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் அப்பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றோர் தத்தமது வீடுகளில் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும், அவர்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக பொலிஸார் மற்றும் சுகாதார துறையினருக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

இதனைவிட இதே கோரிக்கை கொழும்பு – ரோயல் கல்லூரி – கல்கிசை புனித தோமஸ் கல்லூரி கிரிக்கெட் போட்டியின் போது அங்கு சென்ற கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள விமானியுடன் இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இரு தரப்பினருக்குமான நோய் அறிகுறி தென்படும் காலம், இன்றும் (28.03.2020) நாளையும் (29.03.2020) நிறைவடையும் நிலையில் மிகக் கவனமாக செயற்படுமாறு பாதுகாப்புத் தரப்பினரும் சுகாதார துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.