மன்னார் மாவட்டத்தில் விசேட பாஸ் நடைமுறை- விசேட கலந்துரையாடலில் முடிவு!

மன்னாரில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின்போது நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு பாஸ் நடடைமுறையினை அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கு அமைவாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (சனிக்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக மன்னாரில் எதிர்வரும் 30ஆம் திகதியின் பின்னர் கொரோனா ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் அவசரத் தேவைக்காக நடமாடுவதற்காக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பாஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த பாஸ் நடைமுறையானது அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள், வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் வெளியில் நடமாடுவதற்காகவே வழங்கப்படவுள்ளது.

இதேநேரம், மீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரின் சிபாரிசிலும் விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளரின் சிபாரிசிற்கு அமைவாகவும் பொலிஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.

இந்த பாஸ் அனுமதிகள் அனைத்தும் பிரதேச செயலாளர்களின் சிபாரிசுகளுடன் அந்தந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளால் வழங்கப்படவுள்ளது என கலந்துரையாடலில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பொருட்கள் கொண்டு செல்வதற்கான விதிமுறைகள், நடைமுறைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

வெளி மாவட்டங்களில் இருந்து பொருட்களை மன்னாருக்குள் கொண்டு வருகின்றவர்கள் அவர்களே கிராமப் பகுதிகளுக்குச் சென்று வியாபாரத்தை மேற்கொள்ளாமல் மொத்த வியாபாரிகளிடம் கொடுத்துச் செல்வதும், அவ்வாறே இந்த மாவட்டத்தில் இருந்து கொண்டுசெல்லப்படும் பொருட்களும் அந்த நடைமுறைக்கு செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடலின்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.