கூலித்தொழில் செய்பவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் – ஹர்ஷன ராஜகருணா

கூலித்தொழில் செய்து வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டு வருபவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரண வசதிகளை பெற்றுக்கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு சமூர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாa் கடன் வசதி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

குறித்த கடன் வசதி இதுவரை இலட்சக்கணக்கான சமூர்த்தி பயனாளிகளுக்கு கிடைக்காமல் இருக்கின்றது.

குறிப்பாக   கம்பஹா மாவட்டத்தில் இந்த கடன் உதவியை இதுவரை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பவர்களின் முறைப்பாட்டுக்கமைய கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி, அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றேன்.

கம்பஹா மாவட்டத்தில் சமூர்த்தி பயனாளிகள் யாரேனும் இதுவரை 10ஆயிரம் ரூபாய் கடன் வசதியை பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தால் அவர்கள் அரசாங்க அதிபர் காரியாலயத்தின் 033 2223723 என்ற இலக்கத்துடன்  பணிப்பாளரை தொடர்புகொண்டு முறையிடலாம்.

அத்துடன் மக்கள் எதிர்நோக்கும் கஷ்ட நிலையை கருத்திற்கொண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கம் அறிவித்திருக்கும் இந்த 10ஆயிரம் ரூபாய் கடனை நிவாரண உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று நாட்சம்பளத்துக்கு தொழில் செய்துவரும் பலர் எமது நாட்டில் இருக்கின்றனர். அவர்கள் அன்றாடம் உணவுக்கும் கஷ்டப்பட்டுவருகின்றனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லாமல் இருக்கின்றது.

கூலித்தொழில் செய்து வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டுவருபவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரண வசதிகளை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

அத்துடன் அரசாங்கம் பிரதேசசபை மற்றும் கிராம சேவகர் ஊடாக நிவாரண பொதிகளை பணத்துக்கு வழங்கிவருகின்றது. அரசாங்கத்தின் இந்த நிவாரண பொதிகளை பணம் உள்ளவர்கள் பெற்றுக்கொள்வார்கள். கூலித்தொழில் செய்து வருபவர்கள் இதனை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். அதனால் இவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.