வர்த்தகர்கள், விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி- கிளி. மாவட்ட அரச அதிபர் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது வியாபாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்ற வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாவட் அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றக் இக்கூட்டத்தில் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், கமநல உதவி ஆணையாளர், சமூர்த்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தெரிவிக்கையில், “ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது மாவட்டத்திற்கு வெளியே சென்று பொருட்களைக் கொள்வனவு செய்துவரும் மொத்த வியாபாரிகளுக்கு விசேட பாஸ் அனுமதி ஒன்று பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைப் பெற்றுக்கொள்ளவுள்ள மொத்த வியாபாரிகள் தங்களின் விபரங்களுடன் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஊடாக சுகாதார மருத்துவ அதிகாரி (எம்.ஓ.எச்.) உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலகம் ஊடாக மாவட்டச் செயலகத்திடம் அனுமதி பெற்று பொலிஸாரிடம் குறித்த பாஸ் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்ட கிருமிநாசினிகளை ஊரடங்கு காலத்தில் நடமாடும் சேவை மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, விவசாயிகளுக்கு கமநல சேவைகள் திணைக்களம் தற்போது விசேட பாஸ் அனுமதி ஒன்றை அறிமுக்கப்படுத்தியுள்ளார்கள். இதனை விவசாயிகள் தங்களது கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்று கிராம அலுவலர் மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடனும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், அரச உத்தியோகத்தர்களின் போக்குவரத்து தொடர்பபாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.