கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரச சார்பற்ற நிறுவனங்களிடம் மட்டு. அதிபர் வேண்டுகோள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே முழுமையாகச் சென்றடையவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

எனவே அரச சார்பற்ற நிறுவனங்கள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வினை மக்களிடையே கொண்டுசெல்ல அதிகூடிய கவனம் செலுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பில் இயங்கிவருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக கொரோனா தொற்றினால் தொழில் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இன்று (திங்கட்கிழமை) கூட்டப்பட்ட விசேட கூட்டத்திலேயே இந்த வேண்டுகோளை அரசாங்க அதிபர் விடுத்தார்.

இதுதொடர்பான விசேட கூட்டம் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவு மேலதிக அரசங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, “மாவட்டத்தில் மிகவும் கஷ்டப்படுகின்ற வாழ்வாதாரத்தை இழந்துள்ள தினக்கூலி செய்பவர்கள் போன்றோருக்கு அரச சார்பற்ற அமைப்புக்கள் உதவிகளைச் செய்யமுடியுமாக இருந்தால், அவற்றை ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் மாவட்ட செயலகத்தினூடாக அல்லது பிரதேச செயலகங்களினூடாக செயற்படுத்தலாம். அவ்வாறு செய்யப்படும் உதவிகள் பொருட்களாக இருப்பின் எப்பகுதிகளுக்கு எவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற விபரம் வழங்கப்படும்.

இதற்கு மேலதிகமாக நிறுவனங்களுக்கு அப்பால் அமைப்புக்கள் அல்லாத தனி நபர்களிடமோ அல்லது குழுக்களிடமிருந்தோ உதவிகளைப் பெற்றும் வழங்கமுடியும்.

மேலும் இதுவரை மாவட்டச் செயலகத்தினால் வாழ்வாதரங்களை இழந்துள்ள சுமார் 15 ஆயிரம் குடுப்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன” என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.