கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!

நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியதால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவர் இருதய நோயாளி என்பதுடன் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சைபெற்று வந்தவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. இந்த நிலையில் உயிரிழந்த நோயாளியின் விபரங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேகரித்துள்ளது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். எனினும் அவர் நீண்டகாலமாக நீர்கொழும்பு கொச்சிக்கடையில் வசித்து வருகிறார். அத்துடன், அவர் கடந்த மார்ச் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு சென்று திரும்பியுள்ளார். அவரது மகன்மார் இருவரும் வியாபார நோக்கங்களுக்கான கடந்த பெப்ரவரியில் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர்.

உயிரிழந்த நோயாளி நீர்கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் கோரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படாமலேயே நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார். அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.