உயர்தரப் பரீட்சை, பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது கல்வி அமைச்சு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு இம்மாதம் 30ஆம் திகதிக்குள் கடந்த டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வருடம் ஓகஸ்ற் மாதம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு முகங்கொடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் வகையிலான போலிச் செய்திகளைப் பரப்பவேண்டாம் என்று கல்வி அமைச்சு கேட்டுக் கொள்கிறது. அத்தோடு இவ்வாறான போலிச் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் அரசாங்கத்தால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வமான செய்திகளை மாத்திரமே நம்புமாறும் அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

அத்தோடு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.