களப்பணியாற்றும் கடைநிலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்- ஜனகன் கோரிக்கை!

சுகாதார மற்றும் உணவு வழங்கல் துறைகளில் உள்ள ஊழியர்கள் நேரடியாக களத்தில் செயற்படுகின்ற போதிலும் அவர்களுக்கான பாதுகாப்புத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பில் போட்டியிடும் விநாயகமூர்த்தி ஜனகன் விசனம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “COVID-19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுப்பதற்காக, அனைவரும் lock down ஆகி வீடுகளுக்குள் அடைபட்டு இருக்கிறோம்.

ஆனால், சுகாதாரத் துறையும் உணவு வழங்கல் துறையும் இந்த வைரஸ் தாக்கத்துக்கு எதிராக கடுமையாக களத்தில் முன்வரிசையில் நின்று போராடுகிறார்கள் என்பதே உண்மை. இந்நிலையில் சுகாதார மற்றும் உணவு வழங்கல் துறைகளில் உள்ள ஊழியர்கள் நேரடியாக களத்தில் செயற்படுகிறார்கள்.

ஆனால் இவர்களின் பாதுகாப்பு முறைப்படுத்தப்படவில்லை என்றே எமக்குத் தெரிகிறது. பொருளாதார வேறுபாடுகளா இதற்கும் காரணம் எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

இந்த ஊழியர்கள் கொரோனா வைரஸின் தாக்கத்துக்கு முகங்கொடுக்கும் நிலையில்தான் தினம்தினம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கத்தினால் ஒரு படையணி உருவாக்கப்படிருக்க வேண்டும்.

இவர்களுக்கான முறையான பாதுகாப்பு உபகரணங்களை அந்தப் படையணி வழங்கி, பாதுகாப்பாக செயற்படும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். எந்தவித முறையான பாதுகாப்பு நடைமுறைகளும் அற்று, வழமை போல் செயற்படும் புறக்கோட்டை வர்த்தக நடவடிக்கைகள் இதற்கு மிக மிக உதாரணமாகும்.

சீனாவின் வுஹான் சந்தையில் இருந்த ஒரு வியாபாரியினால்தான் இந்த வைரஸ் பரவல் உருவாகியது என்று கருதப்படும் நிலையில், இன்று இலங்கையில் இந்த உணவு வழங்கல் நடைமுறையில் ஈடுபடும் கடைநிலை ஊழியர்கள் இந்த வைரஸ் தாக்கத்தை எவ்வாறு முகாமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அரசு இயந்திரம் சரியாக கையாளத் தவறியுள்ளது.

இவ்வைரஸ் தாக்கம் கொழும்பு மாவட்டத்தில் அதி உச்சமாக இருப்பதாக அறியப்பட நிலையில் புறக்கோட்டை வர்த்தகச் செயற்பாட்டில் இருக்கும் முறையான பாதுகாப்பற்ற நிலைமை நிச்சயமாக இந்த வைரஸ் பரம்பலை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுவது மாத்திரமின்றி, இந்த உணவு வழங்கல் சங்கிலித் தொடரில் இருக்கும் அனைவருக்கும் இப்பாதிப்பு உருவாவதற்கு வாய்ப்பு அதிகம். இது வீடுகளில் இருக்கும் சாதாரண மக்களையும் வந்தடையும் என்பதே உண்மை.

அரசாங்கம் இதனை உடனடியாக கவனத்தில் எடுத்து தமது உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் இருந்து மக்களுக்காக உணவு மற்றும் சுகாதார வழங்கல்களை செயற்படுத்தும் இந்த கடைநிலை ஊழியர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, முறையான செயலணியை உருவாக்க வேண்டும். இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இதர வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்” என ஜனகன் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.