போரை வென்றதைப் போல கொரோனாவை வெல்வோம் – விமல் எகத்தாளப் பேச்சு

30 ஆண்டு காலப் போரை மிகவும் இலகுவாக வெற்றிகொண்டதுபோல் இந்த கொரோனா வைரஸையும் வெற்றிகொள்வோம் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.

கடுவலையில் இடம்பெற்ற அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்குக்கு கொண்டு சென்று விநியோகிக்கும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஆனால், இலங்கையில் பலமான மருத்துவக் கட்டமைப்பு இருப்பதால் இந்த நோயில் இருந்து எம்மால் மீள முடியும்.

நாட்டில் எந்தவோர் அனர்த்தம் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்வதற்கு பலமான இராணுவக் கட்டமைப்பு ஒன்று எமது நாட்டில் உண்டு. அதனால்தான் கொரோனா தனிமைப்படுத்தல் வெற்றி பெற்று வருகின்றது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்தான் தனிமைப்படுத்தல் இடம்பெறுகின்றது. தனிமைப்படுத்தப்படுவோரே அதற்குப் பணம் செலுத்த வேண்டும். இதனால் அது வெற்றிபெறுவதில்லை. எமது நாட்டில் அப்படியொரு நிலை இல்லை.

பலமான மருத்துவப் பொறிமுறை, விநியோகப் பொறிமுறை மற்றும் இராணுவப் பொறிமுறை போன்றவற்றின் சிறப்பான செயற்பாடுகளால் கொரோனாவைக் கட்டுப்படுத்துதல் வெற்றி பெற்று வருகின்றது.

ஊரடங்கை நீக்கும்போது உணவுப் பொருட்களின் கொள்வனவுக்காக மக்கள் குவிகின்றார்கள். இது ஆபத்தானதாகும். மேல் மாகாணத்தில்தான் இந்த நிலை அதிகமாகக் காணப்படுகிறது. இதனால்தான் விசேட ஜனாதிபதி செயலணியின் ஊடாக வீடுகளுக்கு பொருட் ளை விநியோகிக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. போரை வெற்றி கொண்டது போல்  நாம் இந்தக் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டெழுவோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.