யாழில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய ஏனைய 10 பேருக்கும் பரிசோதனை: வைத்தியர் கேதீஸ்வரன்

யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாழ்ப்பாணம், அரியாலையில் அமைந்துள்ள தேவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற ஆராதனையை நடத்திய சுவிஸிலிருந்து வருகை தந்திருந்த மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 20 பேரை காங்கேசன்துறையிலுள்ள ஓர் தனிமைப்படுத்தல் மையத்தில் கடந்த 23 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தோம்.

இவர்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கான எந்தவொரு அறிகுறிகளும் இதுவரை தமக்கு ஏற்பட்டதாக எவராலும் அறியப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இவர்களில் முதற்கட்டமாக 10 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை இவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இம்மூன்று பேரும் சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த போதகருடன் நெருங்கிப் பழகியவர்களாவர். இவர்கள் சிகிச்சைக்காக வெலிக்கந்த கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் மேற்படி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியுள்ள ஏனைய 10 பேருக்குமான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏற்கனவே, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஏனையவர்களுக்கும் இப்பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், வட மாகாணத்தில் மேற்படி ஆராதனையில் பங்குபற்றி சுயதனிமைப்படுத்தலில் தத்தமது வீடுகளில் தங்கியுள்ள 326 பேரையும் சுயதனிமைப்படுத்தல் விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடித்து வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாமென கேட்டுக்கொள்கின்றோம்.

இவர்களில் யாருக்காவது காய்ச்சல், வறண்ட இருமல் மற்றும் தொண்டைநோ போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிப்பதுடன் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.