சமூகப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாங்கள் தனித்திருப்போம்- மன்னார் ஆயர் வேண்டுகோள்!

எமது பாதுகாப்பையும் சமூகத்தின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு அனைவரும் தனித்திருக்க வேண்டும் என மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “எங்களை ஊரடங்குச் சட்டம் ஊடாகவும், அறிவுறுத்தல்கள் வழியாகவும் வீட்டிலே இருக்குமாறு தெரிவிப்பதை நாங்கள் செவிமடுக்கின்றோம். அதற்கு எமது ஒத்துழைப்பைக் கொடுப்போம். நாங்கள் தனித்திருப்பதும் எங்களை நாங்கள் பாதுகாப்புடன் வைத்திருப்பதும் மிகவும் அவசியமாக உள்ளது.

ஒருவரினுடைய தவறினாலே பலபேருக்கு தொற்றக் கூடியது இந்த வைரஸ். ஆகையால்தான் உலகம் முழுவதும் அந்தத்ந நாட்டு மக்களை தனித்து இருக்குமாறு கேட்கின்றார்கள்.

நாங்களும் எமக்கு வெவ்வேறு அவசியங்கள் இருந்தாலும் எமது வாழ்க்கை முறையிலே நாங்கள் அங்கும் இங்கும் செல்வது பழக்கமாக இருந்தாலும் எம்மை சூழ்ந்து இருப்பவர்களுக்காகவும் எமது நாட்டு மக்களுக்கு மாத்திரமன்றி இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்காகவும் எமது பாதுகாப்பையும் மற்றவர்களுடைய பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு தனித்திருப்போம்.

வழமையாக நாங்கள் ஆலயங்களுக்குச் சென்று செபிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தாலும், இந்த நேரத்தில் நாங்கள் உங்களிடம் அப்படியான பொது இடங்களுக்கும் செல்லாமல் இருங்கள் எனக் கேட்கவேண்டியுள்ளது. அதனை நாங்கள் விரைவில் முடித்துக் கொள்ளுவோம் என்ற அந்த எதிர்நோக்குடன் நாங்கள் இறைவனை பிரார்த்திப்போம்.

இத்தொற்று நோயை அடக்கி ஒடுக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வழியாக இவற்றுக்கு சரியான மருத்துவங்கள் கிடைக்கப்பெற்று குறித்த வைரஸ் தொற்றுக்கு விரைவில் முடிவு வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனினும் இக்கால கட்டத்தில் நாங்கள் இறைவனை பார்த்து பிரார்த்திப்போம்” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.