மூன்றாவது நபர் உயிரிழந்ததையடுத்து மருதானையில் 2,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
மருதானை – ஆர்னோல்ட் ரத்னாயக்க மாவத்தையில் வசிக்கும் 2 ஆயிரம் பேரை வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
மருதானையைச் சேர்ந்த, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று(01) உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது என கொழும்பு பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.
இதன்பிரகாரம் குறித்த நோயாளி வசித்த தொடர்மாடி குடியிருப்பு உள்ளிட்ட 18 மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய தேவைகள் கொழும்பு மாநகர சபையூடாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோர் அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், தொற்று ஏற்பட்ட நோயாளிகளுடன் தொடர்புகளைப் பேணிய 308 பேர் ஏற்கனவே கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக மறு அறிவித்தல் வரை கொழும்பு நகரிலுள்ள சிறுவர் இல்லங்கள் மற்றும் வயோதிபர் இல்லங்களுக்கு வௌிநபர்களை அனுமதிக்க வேண்டாம் என்று வைத்தியர் ருவன் விஜயமுனி மேலும் கூறினார்.
கொரோனாவின் அபாய வலயங்களில் ஒன்றான கொழும்பு மாவட்டத்தில் மாநகர சபை எல்லைக்குள் மட்டும் இதுவரை 12 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மருதானையைச் ஒருவரே நேற்று (01) உயிரிழந்துளார். இவருடன் சேர்த்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை