மட்டக்களப்பில் நடமாடும் வாகன வைத்திய சேவை!

ஊரடங்கு சட்டம் காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

ஊரடங்கு சட்டம் காரணமாக வைத்தியசாலைகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் பெறச்செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவரும் நிலையில் அவர்களின் நிலையினை கருத்தில்கொண்டு நடமாடும் வாகன வைத்திய சேவை மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் உள்ள மக்களின் நன்மை கருதி மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை இந்த சேவையினை முன்னெடுத்து வருகின்றது.

படுவான்கரை பகுதியில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு சென்று வாராந்தம் மருத்துபரிசோதனைகள் மற்றும் மருந்துகளைப் பெற்றுவந்தோர் ஊரடங்கு காரணமாக குறித்த வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாத நிலையிருந்தது.

அவர்களின் நன்மை கருதி மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தி.தவநேசனின் ஏற்பாட்டில் அவரது கண்காணிப்பில் இந்த வாகன நடமாடும் சேவைகள் முன்னெடுத்து செல்லப்படுகின்றது.

பொதுமக்கள் வைத்தியசாலையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும் பொதுமக்களின் சிரமத்தினையும் கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தி.தவநேசன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.