மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலை தயார் நிலையில்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

இலங்கையில் கொரோனா தொற்றும் அதன் மரணமும் அதிகரித்து வருகையில் மட்டக்களப்பு மாவட்டம் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மட்டக்களப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் இதுகுறித்த விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விசேட கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜயசேன, இராணுவத்தின் 23ஆவது படைப்பரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயசுந்தர, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். அச்சுதன், வைத்தியர்கள், சுகாதாரப் வைத்திய அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா தொற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏற்றவகையில் விசேடமாக ஏற்பாடு செய்துள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவு 6 தீவிர சிகிச்சைக் கட்டில்களையும், 48 விசேட கட்டில்களையம் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

மேலும், வைத்தியசாலைக்கு வருகின்ற கொரோனா தொற்றாளர்களை உள்ளெடுப்பதற்கான பாதுகாப்பான பிரத்தியேக வாசல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதும் ஆய்வுகூடத்திற்கான அவர்களது மாதிரிகள் உடன் பெறப்பட்டு அனுப்பப்படுவதாகவும் அதன் முடிவுகள் 24 மணித்தியாலங்களுகக்குள் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதியில் 20 ஐ.சி.யூ. கட்டில்களும், ஆண்களுக்கும், பெண்களுக்குமாக 96 கட்டில்கள் கொண்ட விடுதியும் அமைக்கப்பட்டு வருவதாகவும் இதற்கான நிதியுதவி சுகாதார அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாகவும், தங்களிடமுள்ள சீ.ரி. ஸ்கேன் இயந்திரத்திற்கு மேலதிகமாக 120 சிலைட் கொண்ட புதிய சீ.ரி. இயந்திரத்தினை சுகாதார அமைச்சினூடாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அது இன்னும் 3 வாரங்களில் கிடைக்கக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைவிட குறித்த கூட்டத்தில், ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்களாக, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் பொது இடங்களில் சமூக இடைவெளியினைப் பேணுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பொலிஸாருடன் இணைந்து செயற்படுவதற்கு அடையாளப்படுத்தக்கூடிய ரீசேட் அணிந்த தொண்டர்களை இணைத்துக் கொள்வதெனவும் இத்தெண்டர்களை உள்ளுராட்சி மன்றங்களினூடாகப் பெற்றுக் கொள்வது எனவும், ஒலிபெருக்கி சாதனங்கள் மூலமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், காசுத் தாள்கள் பயன்படுத்துவதில் மக்களுக்கு அச்சநிலை ஏற்பட்டிருப்பதால் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதெனவும் இந்த விடயத்தை மட்டக்களப்பு அரச வைத்தியர்கள் சங்கம் முன்னெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொற்றுநீக்கி விசிறும் நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவு, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொலிஸாரினாலும் தொடராக மேற்கொள்ளப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கடற்றொழிலாளர்கள் கரவலை மீன்பிடியில் ஈடுபடலாமெனவும், ஆழ்கடலுக்குச் சென்று பலநாட்கள் தங்கி மீன்பிடிப்பதனால் கிடைக்கும் மீன்களை வெளிமாவட்டங்களுக்கு சந்தைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக மறு அறிவித்தல்வரை ஆழ்கடலுக்குச் செல்லாமலிருப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.