மன்னாரில் பொருள்களின் விலை தளம்பல்; கூட்டுறவுச் சங்கங்கள் முறியடிக்கவேண்டும்

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் வர்த்தகர்கள் தான்தோன்றித் தனமாக பொருட்களை விற்பனை செய்வதால்  பொது மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சதொச மற்றும்  நிறுவனப்படுத்தப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்கள் சரியான முறையில் இயங்கினால் மன்னாரில் பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலைஙேற்றமும் ஏற்படாது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இவ்வாறு  தெரிவித்தார்.

-மன்னாரில் பொருட்களுக்கு விலையேற்றமும் தட்டுப்பாடும் நிலவுவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்

மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள், சில சங்கங்களையும் சதொச நிறுவனங்களையும் உணவுப் பொருட்களை வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வரும் சில தனியார் நிறுவனங்களையும் அழைத்து திங்கள் கிழமை (06.04.2020) கலந்தரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் –

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை தலம்பல்கள் இங்குள்ள பொதுமக்களுக்கு பாரிய பிரச்சனைகளை உண்டு பண்ணி வருகின்றது.

குறிப்பாக தனியார் பொருட்களை விற்பனை செய்யும்போது பல்வேறுபட்ட விலைகளில்  விற்பதாக பொது மக்களிடமிருந்து முறைபாடுகள் வந்த வண்ணம் இருக்கின்றது.

இதற்கமைய நான் பாவனையாளர்கள் சங்க உத்தியோகத்தர்களை சம்பவ இடங்களுக்குச் சென்று கவனித்து அறிக்கை தரும்படி பணித்திருந்தேன்.

இதற்கமைய இவர்களிடமிருந்து எனக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி சில மொத்த  வியாபாரிகள் மன்னார் நகரிலிருந்து கிராமபுற கடைகளுக்கு சில்லறை விலைக்கு  விற்கும் விலைகளுக்கே அவர்களுக்கு பொருட்களை வழங்குவதாலேயே சில்லறை  வியாபாரிகள் அவ் பொருட்களை கூடுதலான விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் நிறுவனப்படுத்தப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்கள்  சரியான முறையில் இயங்காமையும் சதொச கடைகளில் மக்களுக்குத் தேவையான பொருட்கள் இல்லாமையே காரணமாகும்.

நான் சதொசா நிறுவன முகாமையாளருடன் இது விடயமாக  கலந்துரையாட இருக்கின்றேன். இது விடயமாக நான் ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு செல்ல இருக்கின்றேன்.

கூட்டுறவு சங்கங்களும் வெறுமனே இருக்காது கொழும்பிலிருந்து மன்னார்  மக்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்து இங்கு கொண்டு வந்து  நியாய விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது விடயத்தில் ஒரு சில சங்கங்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.  இவர்களின் செயற்பாடுகள் துரிதகதியில் நடைபெறுமாகில் நான் இவர்களுக்கு கடன் பெற்றுக் கொடுக்க தயாராக இருக்கின்றேன்.

மன்னார் பொதுமக்கள் தற்பொழுது தேவையற்ற வதந்திகளை நம்பி பொருட்களை  அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்வதற்கு  முன்டியடித்து வருவதாலும்  பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு  வருகின்றது.

இதனால் தனியார் வியாபாரிகள் தாங்கள் தான்தோன்றித் தனமாக பொருட்களை விலையேற்றி விற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையிட்டு நான் பாவனையாளர் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இது விடயத்தில்  கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளளேன்.
இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளேன்.

வெள்ளைச் சீனியின் விலை 125 ரூபாவுக்கு மேல் விற்கக்கூடாது எனவும்  பருப்பின் விலை 65 ரூபாவாக நிர்னயக்கப்பட்டுள்ளபோதும் அது இன்னும் இங்கு சாத்தியப்படாது காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து உணவுப் பொருட்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை உணவு
ஆணையாளரிடம் தெரிவித்து இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை என்னால் மேற்கொள்ள முடியும்

ஆனால் சங்கங்கள் மற்றும் தனியார் வர்த்தகர்களை நான் இதுவிடயமாக  கோரியுள்ளேன். இது நாளை முதல் (07.04.2020) இவ் செயல்பாடு ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன்.

மன்னாhரைப் பொறுத்தமட்டில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு  உணவுப் பொட்டலங்கள் ஆங்காங்கே வழங்கப்பட்டு வருகின்றன.

பிரதேச செயலாளர்கள் வறுமை கோட்டுக்குள் இருக்கும் குடும்பங்களை  கிராமங்கள் தோறும்  அடையாளப்படுத்தி இவர்களின் பட்டியல்களை கைவசம்  வைத்திருக்கும்போது இவ்வாறு உதவிகள் கிடைக்கும்போது மக்களுக்கு சரியான  முறையில்  அவர்களுக்கு பகிர்ந்தளிக்க இலகுவாக இருக்கும் என
தெரிவித்திருக்கின்றேன்.

ஊரடங்கு தொடர்ச்சியாக இருந்தாலும் கூட மக்களின் நலன் கருதி அரச ஊழியர்கள் சுழற்சி முறையில் கடமைபுரிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளேன்.

மற்றும் விவசாய நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும்படியும் நடமாடும் உணவு  சேவையை மேற்கொள்ளும்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்போது மக்கள்  முன்டியடித்துக் கொண்டு நகரை நோக்கி வர வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும்  தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு செயல்படும்போது எமது மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் ஏற்படாது என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.