சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

”கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்த்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் மருத்துவக் கல்லூரி தலைவர்களது பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துரையாடலில் பங்கேற்ற பேராசிரியர் இந்திக கருணாதிலகவினால் பொதுமக்களுக்கு தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதை விடவும் எதிர்காலத்தில் அதிகளவான நிர்வாகம்  அத்தியாவசியமாகும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இம் மாதம் 20 ஆம் திகதி வரை இரு வார காலத்துக்கு வைரஸ் தொற்று பரவலானது இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே 14 நாட்களுக்கு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, குறித்த இரு வார காலத்துக்கும் மேலதிகமாக தேவையேற்படின் இதே போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ச எழுத்து மூலம் அறிவித்துள்ளார் எனவும், அதற்கேற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் கூறினார்.

அத்தோடு, பொதுப் போக்குவரத்தின்போது சமூக இடைவெளியுடன் பயணிப்பதற்குரிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து, அவற்றை முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி செயலணிக்கு தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ராஜசிங்க இதன்போது தெரிவித்தார்.

விசேட வைத்தியர் மகேஷ் ஹரிஸ்சந்திர கருத்துத் தெரிவிக்கையில், “ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் அசௌகரியமின்றி பொத மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் பாதிக்கப்பட்டோரை இனங்காண்பதற்கும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, “புலனாய்வுத் துறையினர் ஊடாக தேவையான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு தொற்று நோயியல் பிரிவினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இதுவரையில் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும், முல்லேரியா வைத்தியசாலையில் மகப்பேற்றுப் பிரிவை மேலும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.