நிவாரணம் வழங்கவிடாது அரசியல்வாதி இடையூறு! – பிரதேச செயலர்களுக்கும் அழுத்தம்

தொடர் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடாநாட்டு மக்களுக்கு அரசின் நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், கொடையாளிகள் ஊடாக வழங்கப்படும் நிவாரணங்களையும் தடுக்கும் முயற்சியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியின் அரசியல்வாதி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

தன்னால் வழங்கப்படும் பெயர்ப் பட்டியலுக்கே நிவாரணங்களை வழங்கவேண்டும் எனவும், தனது உதவியாளர்கள், உறவினர்கள் ஊடாகவே அவை பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட, பிரதேச நிர்வாகங்களுக்கு  அவர் தொடர் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றார் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

அன்றாடத் தொழில் செய்வோர் உள்ளிட்ட பல குடும்பங்கள் தொடர் ஊரடங்கினால் தொழில் இழந்து வருமானமின்றி உணவுக்காக ஏங்கித் தவிக்கின்றன. இந்தக் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தாலும் இதுவரை எந்த உதவியும் அரசு வழங்கவில்லை. இருப்பினும் பல்வேறு தன்னார்வ கொடையாளிகள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார 1.6 மில்லியன் ரூபாவை வடக்கு மாகாணத்துக்கு வழங்கியிருந்தார். அதில் 5 லட்சம் ரூபா யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகையில் 4 இலட்சம் ரூபா பணமாகவும், ஒரு லட்சம் ரூபா காசோலையாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் வழங்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அந்த நிதியில் சதொச ஊடாகப் பொருட்களைக் கொள்வனவு செய்து பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுத்தது.

வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலகங்களுக்கு தலா 30 பொதிகளும், மருதங்கேணி, சாவகச்சேரி, உடுவில், கரவெட்டி பிரதேச செயலகங்களுக்கு தலா 50 பொதிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு 80 பொதிகளும், நல்லூர் மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவுகளுக்கு தலா 25 பொதிகளும், சண்டிலிப்பாய், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுகளுக்கு தலா 35 பொதிகளும், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு 50 பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவற்றை பயனாளிகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த முயற்சிகள் தற்போது தேக்கமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியின் அரசியல்வாதி, மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அழுத்தம் கொடுத்தன் காரணமாகவே இந்த முயற்சிகள் தேக்கமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு தனிநபர்கள் ஊடாகக் கிடைக்கப் பெற்ற நிதியில், பயனாளிகளுக்குரிய உலர் உணவுகள் பொதிகளாக்கப்பட்டு, மாவட்ட செயலகத்தால் நேரடியாகக் கையளிக்கப்பட்டன. அந்த நடவடிக்கையையும் மாவட்ட செயலகத்தை நிறுத்துமாறும், அவற்றையும் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குமாறும் பணித்துள்ளார்.

இதற்கிடையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் குறித்த அரசியல்வாதியால் தயாரிக்கப்பட்ட பெயர்ப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கே வழங்குமாறும், அந்தப் பொருட்கள் வழங்கப்படும்போது அரசியல்வாதியால் அனுப்பப்படும் அவரது உதவியாளர் அல்லது அரசியல்வாதியின் உறவினர் ஒருவர் முன்னிலையே அது வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சில பிரதேச செயலர்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை பிரதேச செயலகத்தில் விநியோகிக்காது வைத்திருக்கின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் இரண்டாம் நிலை அதிகாரி ஒருவரும், மேற்படி அரசியல்வாதிக்கு ஆதரவாக பிரதேச செயலர்களுக்கு அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளார். இருப்பினும் ஒரு சில பிரதேச செயலர்கள், அரசியல்வாதியின் பெயர்ப் பட்டியலுக்கு அமைவாக நிவாரணம் வழங்க முடியாது என்று தெரிவித்து,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்துள்ளனர். வேறு சில பிரதேச செயலர்கள் அதனை விநியோகிக்காது காத்திருக்கின்றனர்.

மக்கள் இடரால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அரசின் நிவாரணங்களைக்கூடப் பெற்றுத் தராத அந்த அரசியல்வாதி யாரோ ஒருவரால் வழங்கப்படும் உதவியைக் கூட தனது ஆதரவாளர்களுக்கு, தான் வழங்குவதைப் போன்று காட்ட முயல்வது தொடர்பிலும் அதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். மேற்படி அரசியல்வாதியின் செயற்பாட்டினால், குடநாட்டில் அன்றாடத் தொழில் செய்வோர் தொடக்கம் வறுமை நிலையிலுள்ள மக்கள் வரையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
………………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.