யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தாராளமாக கையிருப்பில் – மக்கள் பயப்படத் தேவையில்லை அரசியல்வாதிகளுக்கும் கண்டனம்

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போர்க் காலத்தில் ஓடி ஒளிந்த அரசியல்வாதிகள் சிலர் தற்போது மக்களுக்காக குரல் கொடுப்பது போன்று நடிக்கின்றனர். போர்க் காலத்திலிருந்தே இந்த மண்ணிலிருந்து சேவையாற்றும் வர்த்தகர்களைப் புண்படுத்துகின்றனர். அவர்கள் மக்களுக்குச் சேவை செய்யலாம். எங்களுக்கு ஆலோசனை வழங்கத் தேவையில்லை. அவர்களால் முடிந்தால், அரசிடம் பேசி நியாய விலைக்கு, அரசு நிர்ணயித்த விலைக்கு பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்யலாம்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத் தலைவர் ஜனக்குமார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்கள் அதிகரித்த விலையில் பொருள்களை விற்பனை செய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர். இது தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்தில் கடந்த 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் ஓய்வூதியர்கள் பொருள்கள் கொள்வனவில் ஈடுபட்டனர். நகரத்தில் அதிகளவு மக்கள் கூடவில்லை. பொலிஸாரால் யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த 5ஆம் திகதி அரசியல்வாதி ஒருவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாகவும், விலைகள் அதிகரிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து நேற்று 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அதிகளவு மக்கள் கூடினர். பொருள்கள் வாங்குவதற்கு முண்டியடித்தனர். 10 பெண்கள் உட்பட 37பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் எத்தனை பேர் குடும்பத் தலைவன், தலைவிகளாக இருக்கக் கூடும். அவர்களின் குடும்பத்தில் பிள்ளைகளின் நிலை என்ன? குறித்த அரசியல்வாதியின் பொறுப்பற்ற அறிக்கையால் மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதுமானளவு பொருள்கள் இருக்கின்றன. மக்கள் பயப்படத் தேவையில்லை.
அறிக்கைகள் விடும் அரசியல்வாதிகள் போர்க் காலத்தில் எங்கு போயிருந்தனர். நாம் இங்கிருந்து இந்த மக்களுக்காக சேவை செய்தோம். இப்போதும் சேவை செய்கின்றோம். அரசியல்வாதிகள் பொறுப்பற்ற விதமாக நடக்கக் கூடாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்