ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து 14 சிறப்புக் குழுக்கள் விசாரணை – 92 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை 14 சிறப்புக் குழுக்கள் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சட்டத்தரணி ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் ஊடாக 92 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 11 பொலிஸ் குழுவினரும், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் 3 பொலிஸ் குழுக்களும் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சட்டத்தரணி ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை மொத்தமாக 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதில் 119 பேர் சி.ஐ.டி.யினராலும் 78 பேர் சி.ரி.ஐ.டி.யினராலும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கைதுசெய்யப்பட்ட 197 பேரில் 92 பேர் தற்போது இவ்விரு பொலிஸ் விசாரணைப் பிரிவுகளிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டும் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சி.ஐ.டி.யினரால் 119 பேர் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் விளக்கமறியலில் உள்ள நிலையில், தற்போதும் 40 பேர் சி.ஐ.டி. தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் சில சம்பவங்கள் குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஊடாக விஷேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் உதவிகளும் பிரதான விசாரணைகள் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.