அம்பாறையில் சட்டவிரோத மதுபான வகைகளுடன் நால்வர் கைது!

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை செய்துவந்த நால்வர் கைதாகியுள்ளதாக  கல்முனை மதுவரி   நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் புதன்கிழமை(22)  மதுவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர்  சுற்றிவளைப்பின் போது  நான்கு சந்தேக நபர்கள் கைதாகியதுடன்  நாளை இரு வேறு நீதிமன்றங்களில்   வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் படி கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் க.தர்மசீலன் மற்றும் அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தலைமையில் சென்ற மதுவரி பரிசோதகர்  ரி.நளீதரன் மற்றும் உத்தியோகத்தர்களான  எஸ்.புவனேசன், கே.செந்தில் வண்ணன் ,நித்தியானந்தன், பத்மசிவம்  ,தலதாவத்த, ஆகியோரே இச்சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இதில் திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில்   சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்ட 36 மற்றும் 43 வயதுடைய சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டனர்.கைதான இவ்விருவரும் வியாழக்கிழமை(23) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர    ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பாண்டிருப்பு பகுதியில் நீண்ட காலமாக வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைதாகினர்.

முகநூலில் குறித்த விற்பனையில் ஈடுபடுவதாக சந்தேக நபர்களது  தகவல்கள் பரவியதை அடுத்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு கைதான 42 மற்றும் 53 வயது மதிக்கத்தக்க   இரு சந்தேக நபர்களும்  வியாழக்கிழமை(23)  கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளனர்.

மேலும் குறித்த நான்கு சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்ட கள்ளு மற்றும் மதுபான போத்தல்கள் யாவும் சான்று பொருட்களாக நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  நடவடிக்கையானது மேலும் தொடரவுள்ளதாகவும் பொதுமக்கள் தமது ஒத்துழைப்புகளை வழங்குமாறு  கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் குறிப்பிட்டார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.