13 ஆவது திருத்தம் என்பது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டது – சரத் வீரசேகர
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாக கொண்டே ஜெனிவாவில் 30 கீழ் 1 யோசனை முன்வைக்கப்பட்டது என்றும் அவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம், மனித உரிமை மீறல் உட்பட இலங்கைக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதும் இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு ஆகியவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் மீது துளியளவு பற்று இருப்பவர்கள்கூட, 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கூறமாட்டார்கள் என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.
அத்தோடு கடந்த பல வருடங்களில் நாட்டின் ஒருமைப்பாட்டைக்காப்பதற்காக எமது மூதாதையர்கள் உயிர்த்தியாகம் கூட செய்துள்ளனர் என சுட்டிக்காட்டிய அவர் 13 ஆவது திருத்தம் என்பது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்று எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் இருப்பதாலேயே சமஷ்டி முறைமை உருவாவதை தடுக்ககூடியதாக இருக்கின்றது என்றும் 13 இன் பிரகாரம் காணி அதிகாரம், தொல்லியல் விடயதானங்களும் பிரதி பொலிஸ்மா அதிபரும் முதல்வரின் கீழ் வந்துவிடுவார் என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
அப்படியானால் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் சமஷ்டி முறைமை உருவாகிவிடும் என குறிப்பிட்ட சரத் வீரசேகர, எனவே 13 ஆவது திருத்த சட்டம் நிச்சயம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை