சஹ்ரான் குறித்து தகவல் வழங்கியபோதிலும் CIDயினர் நடவடிக்கை எடுக்கவில்லை – தேசிய புலனாய்வு பிரிவு

ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் குழுவில் இருந்தவர்கள் குறித்து தேசிய புலனாய்வு பிரிவினர் தகவல்களை வழங்கிய போதிலும் சிஐடியினர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ்மா அதிபரிடமும் சிஐடியினரிடமும் தேசிய புலனாய்வு பிரிவினர் சஹ்ரானின் குழுவை சேர்ந்தவர்கள் குறித்து பல அறிக்கைகளை வழங்கியதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அவர்கள் யார் எங்கிருக்கின்றார்கள் என்ற தகவலும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், 2014 முதல் 2017 வரையான காலப்பகுதிக்குள் காத்தான்குடியில் தேசிய தெளஹித் ஜமாத் அமைப்புக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் இடையில் பல மோதல்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சஹ்ரானையும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கான பிடியாணையை பொலிஸார் பெற்றிருந்தனர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் 2019 மார்ச் மாதம் சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஆமி முகடீனை கைது செய்வதற்காக சிஐடியினர் பாசிக்குடா சென்றனர் என்றும் எனினும் அவர்களுக்கு தாங்கள் எந்த நோக்கத்துக்காக அந்த நபரை கைது செய்கின்றோம் என்பது தெரிந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.