கொரோனா அச்சம்: மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வரவு 40 வீதத்தினால் வீழ்ச்சி…

(சுஆத் அப்துல்லாஹ்)
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற வேளையில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று  இன்று (30) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கமைவாக பாடசாலைகளை முன்னெடுத்து நடாத்திச் செல்வதில் சில நடைமுறைப்பிரச்சினைகள் காணப்படுவதாகவும் பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களின் வரவு 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் வலயக்கல்விப் பணிப்பாளர்களினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களை பாடசாலைக்கு அழைக்காமல் வீடுகளில் இருந்து தொலைக்காட்சி மூலம் இடம்பெறுகின்ற கல்வி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதற்கு பெற்றோர்கள் உறவினர்கள் கவனம் எடுக்க வேண்டும் என்றும் இத்தொலைக்காட்சி கல்வி நடவடிக்கையில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதும் சிறந்தது என ஆலோசிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர், ஏ. மயூரன் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கமைவாக பாடசாலைகளை நடாத்திச்செல்லவேண்டும் என்றும் பாடசாலைகளில் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளிகளை பேணல் கைகழுவுதல் போன்ற நடைமுறைகளையும் பின்பற்றுமாறும் கருத்துத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். குலேந்திரகுமார், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் என். புலநாயகம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ரீ. ரவி, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ. ஞானசூரியம்,   மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ் உமர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.