குழந்தைகள் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை வழங்க கோரிக்கை?

குழந்தைகளுக்குப் பிறக்கம் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. சிறுவர் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இந்த யோசனையை முன்மொழிவதாகத் தெரிவித்துள்ளது.

பிள்ளைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவது குறித்து ஆராயும் தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி ஏற்றப்படும் சிறார்களுக்குத் தேசிய அடையாள அட்டை இல்லாமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் புதிய அரசியல் சாசனம் குறித்த பரிந்துரைகளிலும் தேசிய அடையாள அட்டை பற்றிய பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாய் நாட்டின் உரிமை பற்றிய உணர்வை ஏற்படுத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை பணிக்கு அமர்த்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்தல், நாடு முழுவதிலும் ஒரே விதமாக வளங்களை சமபங்கீடு செய்தல், பிள்ளைகளின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது இரகசிய இலக்கத்தைப் பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவதன் மூலம் பல்வேறு நலன்கள் கிடைக்கப் பெறும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும்  கடிதம்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.